சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

முகபுத்தக போதைக்கு ...ஈழம் ஊறுகாய்...!!!




முகபுத்தகம் இன்றைய மந்திரம், மாயை, போதை, பொழுதுபோக்கு, சிலருக்கு தனிமை போக்கி, சிலருக்கு தொல்லை.

நாங்கள் இந்த முகபுத்தகத்தினுள் என்ன எண்ணத்தோடு வருகிறோமோ அது கிடைக்கும் எங்கள் தேவை இங்கு என்ன நட்பா? காதலா? நல்ல உறவா? இல்லை எதுவாக இருந்தாலும் சுலபமாக எங்கள் எண்ணத்துக்கு ஏற்ப கிடைத்து விடுகிறது. நல்ல எண்ணத்துடன் நல்ல செயல்களை செய்ய வருபவர்கள் சமுதாய அக்கறை உடையவர்கள் அவர்கள் கருத்துக்களை விதைத்துகொண்டுதான் இருக்கிறார்கள் பல சமூக போராளிகள் தங்கள் வழியில் பலரை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எழுத்துலக பிரமாக்கள் தங்கள் எழுத்துக்களால் பல ரசிகர்களை தங்களுக்கு சுலபமாக இழுத்துக்கொள்ள கிடைத்த நல்ல சந்தர்பமாக இதை பயன் படுத்தி இன்னும் திறமைகளை வளர்த்து கொள்ளகிறார்கள். இப்படி ஒவ்வொரு துறைகளை சேர்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை துறை சார்ந்த அறிவுகளை எங்கள் மொழியில் எழுதுகிறார்கள் இது எங்கள் மொழிக்கு கிடைத்த இன்னொரு பரிமாணம் மட்டுமல்ல பல துறை அறிவுகளை சுலபமாக இருந்த இடத்திலேயே வாசித்து அறியக் கூடியவாறு இருக்கிறது. இப்படி பல நன்மைகள் இருந்தாலும் பல தீமைகள் ஏமாற்றங்கள் பழி சுமத்தல்கள் இருக்கத்தான் செய்கிறது இது முகபுத்தகத்தின் வரவால் வந்த தப்பா? கண்டிப்பாக இல்லை தவறான எண்ணத்தோடு வந்தவர்களின் முகத்தின் பிரதிபலிப்பு. ஒரு நல்ல விடயத்தை தவறாக எங்கள் சிற்றின்பதுக்காக இன்னும் பல தவறான விடயத்துக்காக பயன் படுத்தி விட்டு முகபுத்தகம் எங்களை கெடுத்து விட்டது என சொல்வது நியாயமா? முகபுத்தகம் ஒரு கண்ணாடி எங்கள் முகம் எப்படியோ அதையே காட்டும் எங்கள் முகம் தவறென்றால் அதில் தெரியும் பக்கங்கள் தவறாகவே இருக்கும் கண்ணாடியின் தவறு எதுவும் இல்லை.

இதை உருவாக்கியவர் எதுக்காக உருவாக்கினாரோ இதில் கணக்கு ஆரம்பித்தவர்கள் எதுக்காக ஆரம்பித்தார்களோ அதையெல்லாம்  தாண்டி இன்று எடுத்திருக்கும் விஸ்வரூபம் எதை நோக்கியது?



முகபுத்தகத்தில் காதல்...!!!

இங்கு காதல் மலரை போல காலையில் பூக்கும் மாலையின் அதே வேகத்தில் வாடியும் விடும் மறுநாள் மீண்டும் பூக்கும் ஒரு கிளையில் பல பூக்கள் இன்றைய இலக்கணம். எங்கள் சமூகத்தில் இளமையில் கலாச்சாரம்  சிறைகளாகி  சுமைகளாக தெரிபவர்களுக்கு சுகந்திரம் கொடுக்கிறது, காதலை கற்றுகொள்வதற்கு முகபுத்தக அரட்டை. ஸ்கைப்காணொளி அரட்டை என பருவ ஏக்க எழுந்தமான குழப்பத்தை காதலென நம்பி பலரும் ஏமார்ந்து தங்கள் அறிவின்மையை அனுபவத்தில் உணர பாடம் புகட்டுகிறது. பல காலம் வாழ்ந்த தம்பதியினர் பல தடவை சொல்ல கேட்டிருக்கிறேன் எதனை வருடமாக உன்னோடு குப்பை கொட்டுகிறேன் இன்னும் உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே அது இது இப்படி இருக்க பல கவி அரசர்கள் பெண்ணின் மனதை புரிந்தவர்கள் யாரும் இல்லை கடலை விட ஆழமானது என்கிறார்கள் இதெல்லாம் இப்படி இருக்க இங்கு பருவ தூண்டுதலில் நடக்கும் அரட்டையில் இரு மனங்கள் எதை மையமிட்டு சங்கமிக்கிறது என்பது இலகுவாக புரிந்துவிடும் இதைதான் இன்று காதல் என்கிறார்கள் ஏக்கங்கள் தீர்ந்ததும் புரிகிறது பிரிகிறார்கள். குறிஞ்சி மலர் போல சில காதல் மட்டும் புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கையில் எங்காவது மலரத்தான் செய்கிறது......... 
இதுதான் இனி வரும் காலங்களில் மிக பெரிய காதல் ஊடகம் என்பதை மறுப்பதற்கு இல்லை ஆனால் எதனை தோல்விகள் தாண்டி வெற்றிகள் வருகிறது என்ற கலாச்சாரம் இனி இருக்க போவதும் இல்லை...



முகபுத்தகத்தில் நட்பு...!!!

நட்பு என்பது தாய்மை என்ற சொல்லுக்கு அடுத்தபடி தூய்மையானதென சொல்லலாம் இது முகபுத்தகத்தில் இனிமையாக மலர்கிறது வரவேற்கதக்க விடயம் ஆனாலும் இங்கு நட்புக்குள் ஆண்,பெண் நட்பு என்ற ஒன்று மேலுள்ளவர்களால் பகடையாக்க படுகிறது , இன்னும் சிறப்பாக சொன்னால் முகபுத்தக காதலுக்கு தூண்டில் புழுவாகி போகிறது முகபுத்தகத்தில் ஆண்,பெண் நட்பு  இவர்களால் பல உண்மை நட்புக்களும் விசதுளி விழுந்த பால் போல பழி சுமந்து நிக்கிறது, சில சுமக்க முடியாமல் ஒடிந்து விடுகிறது..... இதையும் தாண்டி பல நடப்புகள் ஆரோக்கியமாக மலர்ந்து, காய்த்து, கனிந்து, விழுது விட்டு நிக்கிறது....

முகபுத்தகத்தில் நகைசுவை...!!!
எனக்கு முகபுத்தகத்தில் மிகவும் பிடித்த விடயம் இதுதான் அரசியல் கலப்படமில்லாத சில நகைசுவை நண்பர்கள் சுவர்கள், குழுக்கள் உண்மையில் வரவேற்கதக்கது , ஆனால் இங்கு நகைசுவை பதிவர்களுக்கு எப்படியோ எதிர் பாலாரின் அன்பு நிறைந்து விடுகிறது அதனால் அவர்கள் மேல் சக பாலாரின் பொறாமையும் ,காழ்புணர்ச்சியும் அதிகரித்து அவர்கள் கணக்கு போல போலிகள் உருவாக்க படுவது, போலியான பெயர்களில் நண்பர்களாகி தகாத பதிவுகளையும், கேவலமான பழி சுமத்தல்களையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இவர்கள் பெயரை கெடுக்க திட்டமிட்டு சில நண்பர்கள் கூட்டம் ஒன்று பட்டும் செயல்படுகிறார்கள். எப்போதும் நாங்கள் ஒரு பயனுள்ள விடயத்தை அதன் பயனை விட அதை வைத்து மற்றவர்களை எப்படி அழிக்கலாம் என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம், இதுக்கு முகபுத்தகம் மட்டுமல்ல அணுசக்தியும் நல்ல உதாரணம்.
இப்படி இன்றைய காலத்தில் இந்த முகபுத்தகம் ஆழமாக எங்கள் சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கிறது இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில் பந்தாடப்படும் விடயம் ஈழம். 

முகபுத்தகத்தில் ஈழம்...!!!
இன்றைய முகபுத்தகத்தில் தமிழர்களை  ஈழ ஆதரவு ரீதியில் இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று அதாவது ஈழம் பற்றி பதிவுகள் இட்டு ஈழபோராட்டம் பற்றிய சாதனைகளை பேசிகொண்டிருப்பது. இவர்கள் கண்டிப்பாக இலங்கை அரசின் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள். இவர்கள்தான் ஈழஆதரவாளர்கள். இவர்கள்தான் இங்கு பெரும்பான்மை.
இரண்டு, யதார்த்தவாதிகள் சாதனைகளை விடுத்து, விட்ட பிழைகள் என்ன, எதனால் நாங்கள் இந்த நிலையில் இப்போது இருக்கிறோம் எவற்றை திருத்திக்கொள்ளவேண்டும் அவற்றை திருத்திகொண்டால்தான் மீண்டும் இதுபோன்ற நிலை எங்களுக்கு  வரக்கூடாது என்பதுக்கான இதுபோன்ற உரையாடல் நடத்தும் சிறுபான்மை யதார்த்தவாதிகள். இவர்கள் முதல் பிரிவினரின் பார்வையில் துரோகிகள், அவர்களால் பந்தாடப்படும் அதன் விளைவால் அமைதி காக்கவும் முடிவெடுத்தவர்களும் இதில் அடங்கும்...


ஈழத்தில் போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரம் வசதி செல்வாக்கு படைத்தவர்கள், வெளிநாடு போகும் வழி தெரிந்தவர்கள் எல்லோரும் அன்று ஈழத்தில் நண்பர்கள் உறவினர்கள் போராட விட்டுவிட்டு சுயநலம் கொண்டு தன்னுயிர் காக்க சென்று விட்டார்கள் எங்கள் ஒற்றுமையின்மை இங்குதான் ஆரம்பிக்கிறது ஈழ போராட்டத்துக்கு முதல் துரோகமும் இங்குதால் ஆரம்பிக்கிறது இவர்களை தவிர்த்து எஞ்சியவர்களினால் உலகமே திரும்பி பார்க்குமளவுக்கு போராட்டம் வளர்க்கபட்டது . இந்த முதல் துரோகத்தை ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழர்களும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் ஆனால் இவர்களில் சிலர் சொல்கிறார்கள் பணம் கொடுத்ததால்தான் போராட்டம் வளர்ந்ததென்பதால் இவர்களும் மாவீரர்கள் போல் சமமாக பேசுகிறார்கள். இப்படி பேசுவது சரியல்ல மாவீரர்களின் , போராளிகளின் தியாகங்களை பணதுடன் ஒப்பிட்டு கொச்சை படுத்துவது ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கிறது. விட்ட பிழைகளை நாங்கள் உணராதவரை நாளை சரியான பாதையை அமைத்து விட முடியாது. எங்களுக்காக போராடி இன்று (இறந்த பெண்ணின் உடையை கிழித்து இச்சையை தீர்துகொள்ளும்) இராணுவத்திடம் பிடிபட்டு அங்கங்களை இழந்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கல் என எதோ ஒரு வழியில் எஞ்சியவர்கள் இன்று பரிதாபத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இதில் சில பெண்கள் விபச்சாரம் செய்வதாகவும், சிலர் பிச்சை எடுப்பதாகவும், சிலர் இவை முடியாமல் தற்கொலை செய்ததாகவும் நாங்கள் தினம் தினம் அறிகிறோம் இருந்தும் பயன் இல்லை. இப்படி ஒரு சுயநல இனத்துக்காக போராடியது மிக பெரிய தவறென்று இன்று பலர் தங்கள் வாயால் சொல்ல முன் வந்திருகுமளவுக்கு எங்கள் செயல் அவர்கள் மனதை புண்படுத்தி இருக்கிறது. இதில் சிலர் எஞ்சி வந்தவர்களை சந்தேக கண்ணோடு பார்கிறார்கள் இவர்கள் எப்படி உயிருடன் தப்பி வந்தார்கள் ஒரு வேளை மற்றவர்களை காட்டி கொடுத்து தப்பி வந்திருப்பார்களோ என சிந்திச்சு இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். போராட்டமும் போராளிகளும் இப்படி தமிழர்கள் மத்தியில் நடை முறையில் இருக்க............ முக புத்தகத்தில் ??????????

இப்போதும் ஈழத்தில் இருக்கும் தமிழனுக்கும் புலம்பெயர்ந்து சென்ற தமிழனுக்கும் வாதம் நடக்கிறது , இதில் ஈழத்தில் இருக்கும் நண்பன் தனது உண்மை முகம் பெயர் மறைத்து அரசியல் பேசுகிறான் பாதுகாப்புக்காக ஆனால். ஈழத்தில் இருக்கும் நண்பனிடம் புலம் பெயர்ந்த நண்பன் கேட்கிறான் உன் உண்மையான பெயர், படம் போட்டு வாதிடலாமே  இவ்வளவு பயமா உனக்கு புலிகள் பிறந்த மண்ணில்தானே நீயும் பிறந்தாய் எங்கிருந்து வந்தது உனக்கு பயம். நீ வீரனா? உண்மை தமிழனா? நீ ஒரு கோழை....இப்படியாக பலர் அந்த குழுவில் சேர்ந்து சிறிது தயக்கம் கூட இன்றி கேட்கிறார்கள் அன்று எதுக்காக அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள் என்பதை மறந்து.....

ஈழத்தில் உள்ள மக்கள் எவற்றை எல்லாம் இழக்ககூடாதோ அவற்றை எல்லாம் இழந்துவிட்டார்கள் இவர்கள் இழப்பை புலம்பெயர்ந்து  இருப்பவர்கள்  குடியுரிமையாக்கிகொண்டார்கள். இன்று இறுதி யுத்தத்தில் கைகள்,கால்கள், சகோதரர்கள், பெற்றவர்கள், பிள்ளைகள், உறவுகள், சொத்து, நிலம், வீடு என எல்லாவற்றையும் இழந்து எப்படியான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்? இவர்கள் மனநிலை எப்படி இருக்கும். இது பற்றி யாருக்கு என்ன கவலை? அடுத்த யுத்தம் எப்போது வெடிக்கும்? இதுதான் அவர்களின் இப்போதைய கவலை. அப்படி ஒரு யுத்தம் ஈழத்தில் வெடிக்கனும் என ஆவலோடு எதிர் பார்த்துகொண்டிருக்கிறார்கள் எதுக்காக போராடவா?????? குளிர்காயவா??????????

அண்மையில் ஒரு குழுவில் ஒருவர் பதிவொன்றை இட்டார் இந்த செய்தி போலியானதும் கூட ஈழத்தில் எங்கோ காட்டு பகுதியில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் சிறு சண்டை நடந்ததாகவும் அதில் ராணுவத்துக்கு சிறிது இழப்பு இருந்ததாகவும். இறுதியில் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்பது போல அந்த பதிவின் பின்னூட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொட்டிய வார்த்தைகளை தாங்க முடியவில்லை உண்மையா, உண்மையா அப்படி ஒரு சந்தோசம்.. ஆனால் அதில் யாரும் சிந்தித்து பார்த்தது போலவே தெரியவில்லை இது சாத்தியமா? இப்போது ஈழ மக்கள் இருக்கும் மனநிலையில் எப்படி இது சாத்தியமாகும் புலம்பெயர்ந்த தமிழர்களா சென்று போராட போகிறார்கள் அது எந்தளவுக்கு சாத்தியம்??? இப்போது ஈழத்தில் குற்றுயிராக இருக்கும் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வெடித்தால் அந்த மக்கள் நிலை என்ன? சிந்திக்க யாரும் இல்லை...இப்படியாக நாங்கள் செய்த சாதனைகள் வெற்றிகள் இது பற்றி பேசி பேசியே காலத்தை விரயமாக்குவதொடு இதுதான் வீரம் இதுதான் நாட்டு பற்று என்பதுபோல குழு அமைத்து பேசிபேசியே காலம் கடத்தி மனதை சமாதனபடுத்தி சந்தோசம் காண்பதில் என்ன லாபம்?

இன்றைய தமிழனின் மனநிலை தான், தனது குடும்பம் பாதுகாப்போடு இருக்கவேண்டும் ஆனால் அடுத்தவன் போராடி ஈழம் மலரவேண்டும்.... !!!

இப்படியான மனநிலைகளை நீங்கள் இன்றைய முகபுத்தகத்தில் பரவலாக காணலாம். என்னால் வெற்றி பெறமுடியவில்லை என்றால் நான் என்ன செய்யவேண்டும் நான் என்னென்ன பிழைகள் செய்தேன் எதனால் நான் தோற்றுபோனேன் என்பதை அராய்ந்து பிழைகளை திருத்திகொண்டால்தானே நான் வெற்றி பெற முடியும் அதை விடுத்து நான் செய்த சில சாதனைகள், வெற்றிகளை திரும்ப திரும்ப நினைத்து பேசி பெருமிதமடைந்துகொண்டிருந்தால் என் தோல்வி வெற்றியடையுமா? பிழைகளை பற்றி நான் நினைப்பது தவறுகளை பேசி விவாதித்து கேள்விகள் கேட்டு தெளிவது துரோகமென நான் நினைத்தால் வெற்றி சாத்தியமா?  இதுதான் இன்றைய முகபுத்தகத்தில் ஈழ அரசியல், மறுவாழ்வளிக்க பட்ட புலிகள் நடு வீதியில் அநாதரவாக இருக்க வாழ வழி இன்றி நலிந்து நிற்க பழைய புலிகளின் புகழ் பாடிகொண்டே இருக்கிறார்கள் சிலர் இதன் பயன் என்ன என கேட்பவன் துரோகி. இங்கு ஈழமும் இவர்களால் போலிமுகம் கொண்டு நிஜமென நம்ப நடிக்கிறது ........

இனி இதுதான் ஈழ போராட்டமோ?

நடுநிலை விமர்சகரெல்லாம் ஒதுங்கிக்கொண்டனர் நிர்வாண ஊரிலே கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என.........!!!





2 comments:

  1. கண்களை கசிய வைக்கிறது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. பல உயிர்களை, இரத்தங்களை இழந்தாச்சு இனியுமா தூண்டி புழுவாக .........

      Delete