சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

கடவுளுக்கு எதுக்காக புரியாத மொழி?? இடைத்தரகர்கள்??


இப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கையே சுத்தகமாக இல்லாமல் போய் விட்டது. அதுக்காக என்னை போல எல்லோரும் நம்பிக்கை இல்லாமல் இருக்கவேண்டும் என்று நான் நினைக்க முடியாது திணிக்கவும் முடியாது அது அவரவர் விருப்பம். அப்படி விவாதித்து எந்த பயனோ, முடிவோ கிடைக்க போவதில்லை.கிடைக்கவும் இல்லை.இது இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல பல காலமாக நூற்றாண்டாக நடக்கின்ற வாதம் இதுவரை முடியவில்லை, முடியபோவதும் இல்லை.

நான் உங்கள் வழிக்கே வருகிறேன் உங்கள் பார்வையிலேயே சிறிது சிந்திக்கலாம்...

கடவுள் நம்பிக்கை பாமர மக்களுக்கு பல சந்தர்ப்பத்தில் உதவத்தான் செய்கிறது மனோவியல் ரீதியில் அதன் காரணங்கள் உண்மையாகவே இருக்கிறது. அதுக்கு காரணம் அவர்களது நம்பிக்கை. ஒரு தவறை செய்தவன் அதை உணரும் போது அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவராமல் இருந்தால் அவனை அந்த குற்ற உணர்வே அழித்து விடும். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு அந்த பாரத்தை இறக்கி வைக்கிறான். இது போலவே அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும் ஒருவன் இந்த நம்பிக்கையில் தனது தோல்வியை மறந்து மீண்டும் இறைவனை வணங்கி இம்முறை வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் மீண்டும் முயற்சி செய்கிறான் தாழ்வு மனப்பாங்கினை சுமக்காமல். வெற்றியும் பெறுகிறான்.பேய் பிடித்து விட்டது என்ற நம்பிக்கையை இந்த கடவுள் நம்பிக்கையால் போக்க,இப்படியாக சில...பாமரர்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை ஒன்று இருந்து அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காமல் சந்தோசத்தை கொடுக்குமாக இருந்தால் எதுக்காக அதை தவறென்று சொல்ல போகிறோம்? அது வேண்டாம் என்று சொல்ல போகிறோம்? இங்கு இந்துமதம் என்ற போர்வையில் எப்படியான இடங்களில் பாமாரர்கள் ஏமாற்ற படுகிறார்கள் தங்கள் நம்பிக்கையை தளர விடுகிறார்கள் என்று பார்ப்போம்.

கடவுள் எங்கும் இருப்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்கிறார்கள் அப்படி பட்ட இறைவனை எதுக்காக கோவிலுக்கு சென்று பணம் கொடுத்து புரியாத பாசையில் சொல்லி வணங்க வேண்டும்?


அதுக்கும் விளக்கம் சொல்கிறார்கள் பசுவின் உடலில் இரத்தம் எங்கு இருந்தாலும் இரத்தத்தில் இருந்து வரும் பால் காம்பில் மட்டும் தானே கிடைக்கிறது அதுபோலவே கோவில் என்று சொல்கிறிர்கள். அப்படியானால் எதுக்கு புரியாத மொழியில் அர்ச்சனை? கதிர்காம கந்தன் கோவிலில் வாய் கட்டி செய்யும் பூசை முறையில் கடவுள் ஓடி போய் விட்டரா? இல்லையே அருள் மிகுந்த கொவிலாக இன்னும் வழிபட்டுகொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியானால் மந்திரம் என்பது இறை வழிபாட்டுக்கு தடை இல்லை.

அடுத்து கடவுள் குடி கொள்ள சுத்தமான ஒரு இடம் வேண்டும் என்பதால் கோவிலை சொல்கிறிர்கள்.அதே சுத்தமான கடவுள் விரும்பும் இடமாக உங்கள் வீட்டிலேயே ஒரு அறையை வையுங்கள் கடவுளை அங்கு தேடுங்கள் அதன் பின் எதுக்கு கோவில்? பணம் கொடுத்து அர்ச்சனை? தெரியாத மொழி ? உங்களுக்கு நம்பிக்கை இல்லையா உங்கள் வீட்டில் ஒரு இடம் அமைத்து பக்தியோடு வழிபட்டால் இறைவன் அங்கு குடிகொள்வார் என்று.அப்படியும் வணங்கி விட்டு கோவிலிலும் எதுக்கு சென்று வணங்க வேண்டும்?வேறு வேறு கடவுளா? இல்லை கோவிலில் அருள் அதிகம் கிடைக்குமா?

பசுவின் காம்பில் இருந்து பால் கிடைப்பது போல உங்கள் உடலில் மனதை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் அங்கு இறைவனை குடி அமர வையுங்கள் எந்த அசுத்தங்களையும் உங்கள் மனதை நெருங்காமல் பார்த்து கொள்ளுங்கள் அந்த அருள் பொழியும் இடமாக உங்கள் மனது விளங்கும். அப்படி யாரும் செய்வதில்லை ஏன் என்றால் நம்பிக்கை இல்லை எங்களால் சுத்தமாக இருக்க முடியாது அதனால் அது சாத்தியம் இல்லை என்ற நம்பிக்கை அதனால் வீட்டு பூஜை அறையில் தேடுவது அதை சுத்தமாக வைத்து வழி படுவது அதிலும் நம்பிக்கை இல்லாமை மேலும் கோவிலுக்கு இழுத்து செல்கிறது உண்மையில் நம்பிக்கை இருகிறதா உங்களுக்கு? நாயன் மார்கள் எல்லோரும் கோவில் சென்று கடவுளை காணவில்லை அவர்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.

முதலில் உங்கள் நம்பிக்கையை வளர்த்துகொள்ளுங்கள் இன்று பலர் கோவில்களில் நம்பிக்கை அற்றவர்களாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் செல்ல தொடக்கி விட்டார்கள் அதுக்கு பெரும் தன்மையாக ஒரு விளக்கம் சொல்லுவார்கள் எல்லா மதமும் ஒன்றுதான் என்று. காரணம் அதுவல்ல கடாவுளை வெளியில் தேடுவதே.

இப்படியான நம்பிக்கை இல்லாத பக்தர்களே இன்று அதிகம் பணத்தினால் கடவுளை காணலாம் என எண்ணுகிறார்கள் பெரிய யாகம் நடத்துகிறார்கள் பல ஆயிரம் செலவழித்து பூஜைகள் செய்கிறார்கள் எதுவும் திருப்தி இல்லை காரணம் நம்பிக்கை இல்லை. நாடு நாடாக திருத்தலங்களை தரிசிக்கிறார்கள் இவர்கள் தான் எல்லாவற்றாலும் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்து சாமியார், மந்திர வாதிகளை நாடுகிறவர்கள். இவர்கள் தான் மூடநம்பிக்கையை விதைப்பவர்கள்.

கடவுள் என்ற ஒருவன் இருந்தால் உங்கள் மனது சுத்தமாக இருந்தால் அங்கு நிச்சயம் இறைவன் குடிகொள்வான் இதுக்கு மாற்று கருத்து உண்டா?

உங்களால் முடியவில்லையா எங்கு தேடினாலும் உங்களுக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் மனதை அழுக்காக வைத்து கொண்டு எத்தனை முறை நீராடினாலும், புதிய உடை அணிந்தாலும் எத்தனை கோவில்கள் சென்றாலும் எந்த பயனும் இல்லை.

கடவுளை உங்களுக்குள் தேடுங்கள் இல்லையா? வர வையுங்கள் அதுக்கான ஆயத்தங்களை செய்யுங்கள்.

அதை விடுத்து உங்களை பலர் அருள் வாங்கி தருவதாக தரகராக இருந்து ஏமாற்றுவதை மூட நம்பிக்கைக்கு அடிமை ஆவதால் தான் நாங்கள் விவாதிக்க வேண்டி இருக்கிறது.

நம்பிக்கை, மூடநம்பிக்கையாகாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்களை நம்புங்கள் எந்த தரகர்களும் தேவை இல்லை.
கடவுள் என்று ஒன்று இருந்து உங்கள் மனதை சுத்தமாக வைத்து இருந்தால் அங்கு கடவுள் குடிகொள்ள மாட்டாரா? இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?அப்படியானால் எதுக்கு வெளியில் தேடுகிறிர்கள்?


கடவுள் நம்பிக்கை இருந்துவிட்டு போகட்டும் அது அவரவர் மனது சம்பந்தபட்ட விருப்பம். ஆனால் அந்த நம்பிக்கையை வைத்து மூட நம்பிக்கைகளை வளர்ப்பதோ, ஏழைகள்+ பாமரர்கள் சுரண்ட படுவதோ ஏற்றுகொள்ள முடியாதது .....

0 comments:

Post a Comment