சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
நுதல் நக்கும் கார் குழலே - உனை அவள் கோதும் வார் விரல் அழகே இதைக் கண்டவர் எழுதுவர் கவியே மதி வதனம் பூத்த செவ்விதழே - உன் தேன்சுளை சுவைத்திட நா ஊறுதே
நாளும் நீ இசைந்திட மனம் ஏங்குதே
கதை பேசும் மின் கயல் விழியே - உனை
தினம் கண்டும் தித்திப்பு புதிதே
திணறித்தான் போகிறேன் அதில் நானே
மெய் காய்த்துத் திமிரும் பருவக் கனியே – உனை
கண்டதும் விழுங்கிட உமிழ் சுரக்குதே
விரல்களும் தவழ்ந்திடத் துடிக்குதே
கனி தாங்கி விழுந்திடும் கொடியினை போலே – உன்
நடையினில் இடையதன் முறிவுகள் நளினமே
இதைக் கான கண் கோடி எனக்கும் வேண்டுமே
நின் அழகினை முழுங்கிடும் என் கண்களை கண்டு – உன்
கால் விரல்களால் போட்டிடும் கோலம் தாஜ்மகாலே!!!
உன் விவேகத்தை புகுத்தாதே
என் வேகத்தை கூட்டவிடு
மதங்களை திணிக்காதே
மனிதத்தை உணர விடு
கலாச்சாரத்தை காக்க சொல்லாதே
இளமையை உணரவிடு
மூடநம்பிக்கையை விதைக்காதே
அறிவை வளரவிடு
உன் முடிவை நம்பச்சொல்லாதே
தேடலை பெருக்கவிடு
உன் பாதையில் போகச்சொல்லாதே
எனக்கான பாதையை உருவாக்கவிடு
உன் ரசனையில் மகிழச்சொல்லாதே
என்னை ரசிக்கவிடு
உன் லட்சியத்தை சுமக்கசொல்லாதே
என் லட்சியத்தை அடையவிடு
என்னை புகழாதே
என்னை அறியவிடு
என் வாழ்கையை நீ வாழாதே
என்னை வாழவிடு.
கர்ப்பகிரகத்தில் கடவுளை கண்டர் யார் கண்டதில்லை இதுவரை நான் கர்ப்பபையில் எம்மை சுமந்த கடவுள் உன்னை இல்லையென்று கதைத்தவர் யார் எவருமில்லை
உன் கருவறைதான் எமக்கு
உலகினில் முதல் உறை
உயிர் கொடுத்து உருவளர்த்த
உயிருள்ள உண்மை கடவுள் நீ
உயிர் கொடுத்த உன்னை
உருக்குலைய விட்டுவிட்ட
உறவின்றி தவிக்க வைத்து
உலக இன்பத்தில் உருள
உன் பிள்ளை சென்றுவிட்டான்
கருவறையை முதலறையாக்கி
உயிர் கொடுத்தாய்
இறுதியில் இப்படி ஓர் அறையில்
தனியாக தவிக்கவிட்டு
உன் உயிரை எடுக்கத்தானா?!!!
-புலோலியூர் கரன்-
வீசும் தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்ட கூச்சம் தாங்காமல் தென்னம் கீற்றுக்கள் நளினம் காட்டி நெளிய பூவரசம் மரங்கள்
பீபீ செய்ய தூண்டி
இலைகள் காட்டி நிக்க
குளிக்க வந்த புற்கள் சில
விட்டு போக மனமின்றி
ஊறி கிடக்க
தண்ணீரில் தன் அழகை
எட்டி பார்த்து ரசிக்கும்
வளைந்த மரங்கள்
என் ரசனையை தட்டி
எழுப்ப
இத்தனை அழகினை
மொத்தமாக பார்த்திராத
என்
மயங்கிய மனமோ
கொட்டி கிடக்கும் தமிழை
ஒட்டி பார்க்க தூண்ட
எத்தனை வித மரங்கள்
இத்தனை ஒற்றுமையாய்
ஏதோ ஒன்றை சொல்லி போக
இரு பக்கமும் சமமாக
போடும் துடுப்பில் நகரும்
படகின் தத்துவத்தையும்
புரிந்தவனாக நகர்கிறேன்
ரசிகனாக நான் படகினில் ...
மழைமேகம் நிலவதன்மேல் தவழ்ந்து விளையாடுவதுபோல் உன் நிலா முகத்தில் கார்குழல் வீழ்கிறதே உன் தங்க நிற அங்கத்தில் ஒட்டிய வைர மூக்குத்தியும் மங்கித்தான் போகிறது
உன் முகத்தின் அழகு கண்டு
வானவில்லும் வயிறெரிந்து
கருகித்தான் போனதுவே
கருகிய வானவில்லும்
உன் புருவம் ஆனதெப்போ
காந்தம் கொண்டு செய்த
கருநிலா இரு விழியும்
காளையர் மனங்களை
கவர்வதில் மாயமில்லை
உதட்டோரம் குவியும்
உன் புன்சிரிப்பில்
சிதறாமல் ஓரிதயம்
இருந்துவிட்டால் அது
இப்பாரினிலே அதிசயமே
தூக்கிய கையின்
பாவங்கள் கண்டேன்
பாரினை ஏனோ
மறந்தே போனேன்
உடை திமிரும்
உன் பருவங்களால்
எண்ணங்களும்
உருக்குலைந்து
கற்பனையில் பரவசமும்
காட்சிகளில் வந்ததுவே
குளத்தினில் மிதக்கிறது
பல வண்ண தாமரைகள்
என் மன கிணற்றில்
அலைகிறது
உன் இடையின்
நளினங்கள்
பிரம்மனே
இத்தனை அழகையும்
மொத்தமாய் ஓரிடத்தில்
குத்தகை கொடுத்தது
எப்படி நியாயம் !!!
கிளையோடு விளையாடி இலையோடு உறவாடி கனியோடு பசியாறி மனதோடு இதமாகி கணணியோடு காட்சியாகி இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!
ஈர காற்று மெல்ல வீசி வந்து அவள் இதழோடு உரசி செல்ல காற்று பட்டு மூடித் திறந்த கண்கள் என்னை அருகில் சொக்கி இழுக்க பொறாமை கொண்ட மணல்கள் கண்ணில் புகுந்து கலகம் செய்ய புத்தி கொண்ட சில மணல்கள்
அவள் அங்கம் ஒட்டி கொள்ள
அதை தட்டிவிடும் சாக்கில்
என்கைகள் அவளை தொட்டுவிட
வெட்கி தலை கவிழ்ந்து அவளும்
மெல்ல என் மடியில் ஒட்டிக்கொள்ள
கைகளை மெல்ல மாலைகளாக்கி
தன்னோடு இறுக்கிக்கொள்ள
போக வழியன்றி வீசி வந்த தென்றலும்
வெட்கி சென்று கடலிடம் முறையிட
நியாயம் கேட்க வந்த அலையும்
நம்மை பிரிக்க மனமின்றி
பலமுறை திரும்பி செல்ல
ஒன்றாய் கண்கள் மூடி கிடந்தோம்
படகின் இனிய நிழலிலே
பாரினை மறந்து மகிழ்ந்தோம்...!
-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans
என் உயிர் வருத்தி
உன் உயிர் கொடுக்க
கருவறையில் சில மாசம்
உன்னை நான் சுமந்தேன்
என்னை உயிரோடு பிணமாக்கி
எதற்கிந்த கல்லறை இல்லத்தில்
அனாதையாய் விட்டு சென்றாய்
உன்னை
பத்து மாதம் என் கருப்பையில்
சிறை வைத்ததாக நினைத்து
எனக்கு
இங்கு தினமும் மரண தண்டனையா...!!!
மார்பழகு கெட்டுவிடுமென மகனுக்கு மாப்பால் கொடுக்கும் மங்கையர் உலகினில் இவனுக்கு தாயிந்த பசு இனி வரும் காலம்தனில் முதியோர் இல்லங்கள் அடிகொன்று வந்தாலும் ஆச்சர்யமில்லை.......!
தாய் மண்ணில் கோடிகளில்
தொழிற்சாலைகள்
உன் மகளுக்கு கோடிகளில்
சீதனம்
வங்கியில் மில்லியன் கோடிகள்
பணமாக
இத்தனை இருந்தும் இறப்பர் செருப்பில்
இந்தியர் மனதில் இடம் பிடிக்கும்
சூட்சுமம் எப்படி அறிந்தாய்
நிஜமாகவே நீ நடிகன்டா
இருப்பதை வாரி வழங்கிவிட்டு
இல்லாமல் இருப்பதை போல
இங்கு பெருமை பேசிக்கொள்ள
இதுபோன்ற புத்தகங்கள் இருக்கும்வரை
உன்னை தலைவன் என போற்றும்
உருப்படாத ரசிகர்கள் இருக்கும்வரை
நீதான் அடுத்த முதலமைச்சர்
கல்விக்கண் திறந்த காமராஜர் கூட |
உன் கருணைக்கு பின்தான்
அவர் உழைக்கிறாய்
கொடுப்பது கொடுக்காதது
அவர் விருப்பம் என்று
யாரோ என்னை ஏசும்
சத்தம் கேட்கிறது
இதுபோன்ற மக்களை வைத்து
போற்றி புகழ்ந்து அசாதாரணமாக
உழைப்பவன் கொடுக்க கூடாதென்றால்
திருடுபவன்தான் கொடுக்கனும்
ஐயாயிரம் சம்பளம்
பெறுபவன் கூட
ஐநூறு கொடுக்கிறான்
கோடிகளில் வாங்குபவன்
உயிரிலும் மேலான ரசிகர்கள்
என்று அடைமொழி சொல்பவன்
கொடுக்கும் விகிதம்தான் என்ன?
நடிகனை நடிகன் என்றால்
யாருக்கும் பிரச்சனை இல்லை
தலைவன் என்கிறீர்களே
அதனால் நாளை இதுபோன்ற
சுயநலவாதிகள் நாடாழ
ஆசை கொள்ளலாம் அதனால்
தோலுரிக்க வேண்டியுள்ளது
இந்த சுயநலவாதிகளை
உணவுக்கு வழியில்லாத
எத்தனையோ பேர்
உன்னை பார்த்து
புகைக்க பழகினர்
உன் உருவத்துக்கு ஏறி
பாலூத்தினர்
உனக்காக வேண்டி
மண் சோறு உண்டனர்
ஆயிரம் ஆன்மிகம் பேசும்
உனக்கு இதை தடுக்க ஏன்
வார்த்தை வரவில்லை
இவை தவறென்று உரைக்க
முடியவில்லை
இவர்கள் அன்பை பார்த்து
வியக்கிறேன் என்று
நாடகமாடினாய்
திரையில் மட்டுமல்ல
அதை விஞ்சிய நடிகன் நீ
நிஜத்தில்!!!!
உன்னில் நனைகிறது என் விழிகள் காந்தபார்வையில் இரும்பாகியே!மதிவதனி உன் வதனம்கண்டு மறந்ததென் மதியும் முகமும்!கன்னங்கள் சிந்தும் போதையில்
மதுக்கிண்ணங்கள் தோற்றதே!
குவியும் உன் செவ்வுதட்டில்
சிதறித்தான் போகிறேனே நான்!
திமிரும் உன் பருவங்கள் கண்டு
உருகுது என் இளமையும் மென்று!
மெல்லிடையோ இது கள்ளிடையோ
போதையில் ஆடி முறிந்து முளைக்குது!
நீ கன்னத்தில் வைத்த கையழகில்தான்
என் எண்ணத்தில் கவியும் வந்து வீழ்ந்ததோ!
பசி இல்லாததுபோல
பாசாங்கு செய்வாள்
பிள்ளையின் பசி போக்க
பட்டினியாய் கிடப்பாள்
கடவுள் இல்லை என்று
எப்போதும் நான் சொன்னதில்லை
அம்மா உன் கருணை கண்டதால்
தானும் தன் குடும்பமும்
வறுமையில் தவிக்க
பூமியை செழுமையாக்கி
உலகத்தவர்கள் யாவரும்
பசியாற உழைக்கும்
உழவனும் தாயும் ஒன்றே
எனக்கு இறைவன் அம்மா என்றால்
உலகிற்கு அம்மா உழவன் என்பேன்
உழவனே உன் தியாகம் உணர்ந்ததால்
உள்ளத்தில் இன்னமும் நன்றி உள்ளதால்!!!
-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans
நாகரீகம் இங்கே கூட கூட உடைகள் அங்கே குறைகின்றன புதிய உடையை கிழித்து அணியும் புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே இன்றைய கண்ணகிகள் போதைக்காக கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் கலியுக கர்ணன்களை உருவாக்கும்
செல்வந்த சுகபோக வாரிசிவர்கள்
சூரியன் மேல் பழி போடாத குந்திகள்
சுகம் தேடி அலையும் இந்திரலோகமிது
மாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கே
மழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுது
கிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்தி
கற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கே
சுருங்கிய வயிற்றை தண்ணீர் விட்டு நிரப்பும்
சுந்தர மதன காம சுகபோகத்தவர் எச்சங்களிவர்கள்
ஒவ்வொரு நிமிடத்தையும் நரக யுகமாக கடக்கும்
கடவுள் குழந்தைகள் இவர்களும் மனிதர்கள்தான்!!!
கடவுளின் தூதுவன் நான் சாதியில் உயர்ந்தவன் என் அங்கங்கள் எல்லாம் அருள் பொழியும் தங்கங்கள்
என்னுடல் பட்டால் அடையலாம்
பூலோகத்தின் பிறவிப்பயன்..!!!
இவர் பாதத்தால் மிதிக்கும் போதே இத்தனை அருள் என்றால் இவர்...........
-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans
இறந்தது நீதான்
எடுத்து சென்றதோ
என் உயிரைத்தான்
கல்லறையில் நீயோ
அமைதியான தூக்கத்தில்
அதன்மேல் நானோ
நடமாடும் பிணமாக!!!
-புலோலியூர் கரன்-
தங்கங்கள் தான் மின்னுமே ஏனோ பெண்ணே உன் அங்கங்கள் மேலிருப்பதால் மங்கித்தான் போகின்றன உன்மேல் வானவில்லுக்கு என்ன இத்தனை உரிமை
சேலையாகி மானம் காக்கிறதே
மானம் காப்பதாக சொல்லி
உன் சோலை தழுவியே
என் கோவம் தூண்டுதே
பூக்கள் பூத்து குலுங்கும்
அழகிய நந்தவனத்தில்
உன்னையன்றி எதையும்
பார்க்க தோன்றவில்லையே
உன் நளினம் கண்டு மயங்கி
மயிலும் நடனம் கற்க வந்ததோ
உன்னசைவு கொண்டு அன்னமும்
நடை பயின்று சென்றதோ
வண்ணத்து பூச்சியொன்று
தேன் குடிக்க வாடி நிக்குதே
உன் பாதத்தை புது மலரென
மதி மயங்கியே
பூமிக்கு பிறைநிலா அழகு
உன் நிலா முகத்தில்
இரு பிறைநிலா இமைகள்
பேரழகு...!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
இறைவா!
யாருமற்ற அனாதைகள்
உன் குழந்தைகளாமே
தவம் ஒன்று செய்கிறேன்
நீயும் மலடாகி போக
வரம் ஒன்று தருவாயா!!!
-புலோலியூர்
கரன்-
கவலையில் இருந்தேன்
கனவுகள்
இல்லை அவள்
நினைவுகளால்
எனக்கு
தூக்கங்கள்
இல்லை
கண் மூடியும் விழித்திருந்தேன்
தையலவள் கூந்தலிடை
முகம்புதைத்த நினைவுகளில்
கண் விழித்திருந்தும்
லயித்திருந்தேன் அவள்
சுவாசம் தடவிய ஸ்பரிச
பொழுதுகளை மீட்டியபடி
என் கஷ்டத்தை தீர்க்க கோவில் நோக்கிய பயணத்தில் பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் பிச்சைகாரர்களில் தட்டுக்கள் கடவுளின் உண்டியல்கள் என்னை நோக்கியே இருக்கின்றனநான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!
-புலோலியூர் கரன்-என் பக்கத்தில் இணைய....http://www.facebook.com/sabaharans
உலகை காக்கும் உமையவள் உடல்தனில் அத்தனை அழுக்கா? உருட்டி உருவம் செய்து உயிர் கொடுக்கும் அற்புத அறிவியல் கடவுளர் உலகினில் பார்வதி குளிக்க காவலர் ஏனோ?
யாரிடமிருந்து காத்திட சொல்லி
குளித்திடும் இடமதில்
உயிர் கொடுத்த உருவத்தினை
வாசலின் காவல் வைத்தார்?
அவனன்றி அணுவுமசையாத
அற்புத சக்திவான் சிவன் கூட
தன் பிள்ளை இவனென
அறிந்திடா மாயமென்ன
பிள்ளை"யார்" என கேட்டது சரியா?